புராணம் சொன்ன கடவுள் கதையிலிருந்து கலியுகம் சொன்ன மனிதனின் கதை வரை காதல் என்கிற நதியை கடக்காமல் யாரும் வந்ததில்லை. அன்பின் முதிர்ச்சிதான் காதல். ஓர் அறிவு உயிர் முதல் ஆறறிவு மனிதன் வரை காதல் என்பது பொதுமொழியாக போற்றப்படுகிறது. பறவை, விலங்கு மற்றும் மரம் என எல்லோரும் அறிந்த மொழி இயற்கை உணர்ந்த ஒரே மொழி காதல். சங்க இலக்கியங்கள் மனித வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் இரு பிரிவுகளாக பிரித்ததன. அகப்பாடல்கள் காதலைப் போற்றியும் புறப்பாடல்கள் வீரத்தைப் போற்றி யும் பாடப்பட்டன. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் மனதாலும் உணர்வாலும் புரிந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொள்வது தான் உண்மையான காதலுக்கு அடையாளம்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடியில் தமிழும் காதலும் இரட்டைப் பிரசவம் ஆயின. சங்க இலக்கியத்தில் கிடைத்த 2,381 பாடல்களில் 1,862 பாடல்கள் காதலைத்தான் பாடுபொருளாக கொண்டு பாடியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சங்கப் பாடல்கள் பாடிய 473 புலவர்களில் 441 புலவர்கள் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலான புலவர்கள் காதலைப் பாடி யிருப்பது தமிழுக்கு மேலும் சுவைகூட்டுகிறது.
“மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படு வார்.”
(அதிகாரம் - 129 - புணர்ச்சி விதும்பல்லி குறள்:1289)
என்ற திருக்குறளில் காமம் மலரைவிட மென்மையானது என்கிறார் திருவள்ளுவர். அன்றொரு காலகட்டத்தில் காதலில் காமம் மறைந்திருந்தது; அதனால் அதை மென்மை யானது என்றார்கள். இன்றைய சூழலில் காமத்தில் காதல் கரைந்துபோனதால் அது வன்மையானதாக மாறிவிட்டது. இரகசியமாய் தபாலில் வரும் காதல் கடிதங்கள், மொட்டை மாடியில் சலனமில்லாமல் மனதை தூதனுப்பிய காதல் சடுகுடுக்கள், புறாவோடு தமிழையும் தூதனுப்பிய சங்க காதல், இரயிலில் காதலை தூது அனுப்பிய இனிய தருணங்கள், ஒவ்வொரு இரவிலும் நிலா வெளிச்சத்தில் காதலியை நினைத்து கவிதை எழுதிய நாட்கள், அத்தை மகன் அல்லது மாமன் மகள் வரவுக்காக தவமாய் தவமிருந்த பொழுதுகள் என இப்படி காதல் மட்டும் நூற்றாண்டுகளைக் கடந்து கதை சொல்லும். இந்த காதலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்றால் இல்லை. பெரும்பாலான சங்க பெண் புலவர்கள் எழுதிய பாடல்களில் தலைவனின் பிரிவாற்றா மையை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். தலைவன் மீதுள்ள காதலும், அவனைப் பிரிந்து வாழும் அச்சமும் மற்றும் அவர் களின் மன உறுதியும் பாட்டிலே இயல்பாக வெளிப்படுகின்றன. பல சகாப்தங்களைக் கடந்துசென்றாலும் சங்க இலக்கியத்தில் தலைவனுக்காக தலைவி காத்திருக்கும்போது மலரும் காதல் சுவையை மனம் மட்டும் கடக்க இயலாமல் அங்கேயே சிலாகித்து நிற்கிறது.
தனிமையில் இருக்கும் தலைவிக்கு இரவு நேரம் வந்தாலே காதல் கிள்ளும்; காமம் கொல்லும். அப்படி ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இரவில் வீட்டில் உள்ளவர்கள் உறங்கிவிட்டார்கள். காமம் தின்று கழித்த எஞ்சிய இரவுகள் அவளைக் கொல்வதுபோல கொடுமையாக இருக்கிறது. கடல் அலை கரையை தாக்குவது போல காம அலையில் சிக்கி கரையேற முடியாமல் தவிக்கிறாள் தலைவி. கார்த்திகை மழையும் மார்கழிப் பனியும் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்கிற இரவு நேரம். வானம் ஆசையாய் மழை பெய்து பூமியை புணர்ந்துகொண்டிருக்கிறது. இந்த சங்கமத்தின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த இடி மத்தளமாய் முழங்க மின்னல் இழைகளில் ஊடுருவும் வெளிச்சங்கள் இதைப் புகைப்படம் எடுக்கின்றன. ஆனால் இது எதுவும் புலப்படாமல் பித்து பிடித்தவள்போல் நிற்கிறாள் தலைவி. உடல் இங்கிருக்க நினைவோ தலைவனை எண்ணி சிறகடிக்கிறது. தோழி இடைமறிக்கிறாள்; அப்போதுதான் தலைவி தன் மௌனம் கலைக்கிறாள்; தலைவி தோழியுடன் பேசும் இனிய சொற்கள் தேனுண்ட வண்டின் ரீங்காரம்போல் ஒலிக்கிறது. “தோழி! ஊர் அம்பலத்தில் உட்கார்ந்து வெட்டிக்கதை பேசுவோரெல்லாம் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். கொலை செய்யும் கூலிப்படையினரை விட கொடுமையான காதலனை பிரிந்து இருக்கும் காமத்தீயில் புரட்டி எடுக்கும் நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடலில் கலந்து கரையைத் தாண்டி தாக்கும் காம நோய் என்னைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் என் காதலனின் வருகைக் காக காத்திருக்கும் நொடிகளில் என் நெஞ்சம் என்னையும் உன்னையும் கேட்காமல் மலை யேறிச் சென்றுவிட்டது” என்றாள் தலைவி. “
நெஞ்சம் எப்படி மலை யேறும்? அதற்கான அவசியம்தான் என்ன?” என்று தன் மெல்லிய குரலால் தலைவியின் தோளைத் தட்டிக்கேட்க காதலும் காமமும் குழைத்த சொற்களால் பேச ஆரம் பித்தாள் தலைவி. “என் உயிரினும் மேலான காதலன் இந்த காட்டு நாட்டைச் சார்ந்த என் தலைவன் கானநாதன். இந்த நள்ளிரவில் அடர்ந்த இருண்ட காட்டில் சுனையில் பூத்திருக்கும் குவளை பூக்களில் வண்டுகள் தேனுக்காக மொய்க்கின்றன; அதைக் காதலன் சூடிக்கொண்டு வருகிறான். யானை முதுகில் உள்ள கயிறு உராய்ந்து உராய்ந்து உண்டான தழும்பு போல இருக்கும் ஒரு ஒற்றையடிப் பாதையில் என் தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அந்த சாலையில் ஆங்காங்கே ஆழமான குழிகள் பள்ளங்கள் என குண்டும் குழியுமாக கிடக்க அதில் மழைத் தண்ணீர் நிறைந்திருக்கிறது. அடர்ந்த இருளில் பாதை எது, குழி எது என்று தெரியாதபடி இருக்கும் அந்த வழியில் நடந்து வரும் அவர் கால் அடிபட்டு விழுந்துவிடுவாரோ என நினைத்து அவரின் காலடியைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள என் நெஞ்சம் அவரைப் பின்தொடர்ந்து மலைக்குச் சென்றுவிட்டது” என்று தன் தலைவன் மேல் உள்ள காதலைத் தலைவி வெளிப்படுத்தியபோது காதல் மழையில் தோழியின் கண்கள் குளமாயின. பாதையின் குழியில் காமம் புதைந்தது; அன்பு மிகுந்தது. தலைவியின் காதலில் மெய்சிலிர்த்தாள் தோழி!
“மன்றுபாடு அவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொளவரின் கனைஇ, காமம் கடலினும் உரைஇ, கரைபொழி யும்மே.
எவன்கொல் - வாழி, தோழி - மயங்கி இன்னம் ஆகவும்,
நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்புபட்டு இருளிய இட்டுஅருஞ் சிலம்பில்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கான நாடன் வரூஉம், யானைக் கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறுநெறி,
மாரி வானம் தலைஇ நீர்வார்பு,
இட்டுஅருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி
நோக்கி, அவர் தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே”
(அகநானூறு - கபிலர் : 128)
என்று அகநானூறு காட்டும் சங்க இலக்கிய காதலோடு தமிழும் சேர்ந்து மணக்கிறது.
பல நேரங்களில் மோதலில்தான் காதல் பிறக்கிறது. மோதல் இல்லாத காதல் போலித்தனமானது. இருவரும் ஒருவரை ஒருவர் வாங்கிக் கொள்வதும் தாங்கிக்கொள்வதுமாக செல்லும் காதல் பயணத்தில் தான் அன்பின் பரிணாமம் வெளிப்படுகிறது. தோழிகள் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக் கும் வேளையில் ஓடி வந்து ஒருவன் தன் காலால் மணல் வீட்டைக் கலைத்தான். அவர்கள் சூடியிருந்த மாலைகளைப் பறித்துக் கொண்டதோடு விளையாடும் பந்துகளையும் அவன் எடுத்துக்கொண்டு ஓடினான்.
அப்படிப்பட்ட குறும்புக்கார காளையைப் பற்றி தேக்கிவைத்த நினைவுகளை ஞாபகப்படுத்தி நாணத்தின் வாசலில் நின்றுகொண்டு காதலை கண்களில் தேக்கிக் கொண்டு தோழியை வியக்க வைக்கும்படி பேச ஆரம்பிக்கிறாள் தலைவி. “தோழி! நம்மிடம் அத்தனை குறும்புகள் செய்த அவன் பின்பு ஒருநாள் என் வீட்டிற்கு வந்தான். நானும் என் தாயும் மட்டும் வீட்டிலிருந்தோம். “தண்ணீர் தாகமாக இருக்கிறது” என்றான். என் தாயோ ஓர் அடர்ந்த பொன் கிண்ணத்தில் தண்ணீர் மொண்டு, “சுடரும் அணிகலன் பூண்டவளே! அவன் நீர் உண்ணும் படி செய்துவிட்டு வா” என்று சொல்லி கிண்ணத்தை என் கையில் கொடுத்தாள். நானும் நம்மிடம் முன்பு குறும்பு செய்தவன் தான் அவன் என்று தெரியாம லேயே சென்றேன். அவனோ என் கையைப் பற்றி இழுத்தான். நானும் பயந்து போய் “அம்மா, இவன் செய்வதைப் பார்” என்று கூச்சலிட்டேன். அலறி யடித்துக் கொண்டு ஓடிவந்த தாய் என்னவென்று கேட்க “உண்ணும் தண்ணீர் விக்கினான்” என்றேன். என் தாயோ அக்கறையில் அவன் பிடரியை நீவ என்னை அவன் கடைக்கண்ணால் கொல்பவன்போல பார்த்தான். அவனும் நானும் சிரித்துக்கொண்டோம். அவன் திருடன் மகன்; காதல் திருடன் என்று காதல் பொங்க சொல்கிறாள் தலைவி. அவன் கைகள் அவளைத் தீண்டுவதற்கு முன்பே காதல் தீண்டிவிட்டது. அதனால்தான் அவள் கூச்சலிட்ட போது என்ன ஆயிற்று என ஓடிவந்து கேட்ட தாயிடம் “ உண்ணும் தண்ணீர் விக்கினான்” என்றாள். விக்கினால் தான் தண்ணீர் குடிப்பார்கள்; ஆனால் தண்ணீர் குடித்த தால் விக்கியது என்று காதல் போதையில் விழுந்த தலைவிக்கு வார்த்தை தடுமாறுகிறது; இங்கு மொழியை வென்றுவிட்டது காதல்! அவன் இதயத்தை திருடிய தால் தான் அவனைக் ‘காதல் திருடன்’, ‘திருட்டுப் பய மகன்’ என்று வெட்கத்தில் வருணிக்கிறாள் தலைவி.
“சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
‘அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
‘உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தான், அக் கள்வன் மகன்”
(கலித்தொகை 51 - குறிஞ்சிக்க- 15 - தலைவி கூற்று - பாடியவர் - கபிலர் திணை: குறிஞ்சி.)
கடைக்கண் பார்வையில் வழிந்த காதலில் அவன் குறும்புச் செயல்கள்கூட அன்புச் சண்டையானது மிகப்பெரிய வேதியல் மாற்றம் தான்!
காதல் தோல்வியைவிட மிகப்பெரிய துன்பம் காதலனும் காதலியும் பிரிந்து வாடுவது என்பது உண்மை. பிரிவு என்பது இருவருக்குள்ள நெருக்கத்தை அதிகரிக்கும். பிரிவதும் கூடுவதும் வீட்டின் முன் வாசல் பின்வாசல் போல! கூடிப் பிரிவதும், பிரிந்து கூடுவதும்தான் இயல்பான காதல்.
திடீரென்று தலைவிக்கு சிரிப்பு வந்துவிட்டது. தன் தோழியை அழைத்து “எனக்கு ஒரே சிரிப்பாக வருகிறது. தோழி! உன் காதலன் ஒருநாள் உன்னைப் பிரிந்தாலும் தாங்காமல் உயிரின் ஊசலாட்டம் பெறுபவளே! நீ பொம்மல் ஓதி! பொலிவுடைய கூந்தலை உடையவளே! நம்மை இங்கே தனியாக தவிக்க விட்டு விட்டு தலைவர் தனியாக வேறு நாட்டுக்குச் செல்வாராம். அவர் பொருள் ஈட்டிக் கொண்டு வரும்வரை நாம் நம் வீட்டிலேயே வாழ வேண்டுமாம். அதோடு படமெடுத்து ஆடும் பாம்பே நடுங்கும் நள்ளிரவில் முழங்கும் இடி ஒலியைக் கேட்டுக்கொண்டு நாம் உயிர் வாழ்ந்துகொண்டு இருப்போமாம். இதைக் கேட்கவே நகைச்சுவையாக இருக்கிறது” என்று தலைவி தன் தோழியிடம் எள்ளல் பொங்க சொல்கிறாள்.
“பெருநகை கேளாய், தோழி! காதலர் ஒருநாள் கழியினும் உயிர்வேறு படூஉம்
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச் செல்ப என்ப, தாமே; சென்று,
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை
வாழ்தும் என்ப, நாமே, அதன் தலைக் கேழ்கிளர் உத்தி அரவுத்தலை பனிப்ப,
படுமழை உருமி உரற்று குரல் நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே”.
(நற்றிணை :129 - ஔவையார்.)
இவ்வாறாக, நகை உணர்வும் எள்ளலும் பொங்க தன் பிரிவுத் துயரைத் தோழியிடம் சொல்கிறாள் தலைவி.
“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.”
(அதிகாரம் :116 - பிரிவாற்றாமை- குறள்:1151)
பிரிந்து செல்வதில்லை என்றால் அந்த மகிழ்ச்சி யான செய்தியை என்னிடம் சொல். நீ போய் தான் தீரவேண்டும் என்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் சொல் என்று பிரிவாற்றாமையின் உச்சத்தை சொன்ன திருவள்ளுவரின் வரிகளை ஔவையாரின் இந்த நற்றினைப் பாடல் நினைவு படுத்துகிறது. தலைவன் பிரிந்துசென்றால் தலைவி யாகிய நான் அக்கணமே இறந்துவிடுவேன் என்ற சொல்லில் உயிர் வாழ்கிறது காதல்!
கணநேரம் உடலில் நிகழும் ஹார்மோன்களின் மாற்றத்தினால் வருகிற காதல் பல நேரங்களில் காமப் பசிக்கு உணவாகி விடுகிறது. வெறும் உடல் இச்சைக்கு ‘காதல்’ என்று பெயர் சூட்டுவது காதலின் புனிதத்திற்கு முரணானது. பெண்களைக் கட்டில் அடிமைகளாக்கும் காமப் பிசாசுகளை களையெடுக்க மனதைக் காதல் செய்வீர்! இன்று நுகர்வுக் கலாச்சாரத்தில் காதல் திசைமாறி பயணித்துக் கொண்டிருக்கிறது. காதல் என்றாலே பெண்களின் பலவீனமாகவும் செலவீனங்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. வாழ்த்து அட்டைகளில் இருந்த காதல் இன்று (ஜ்ட்ஹற்ள்ஹல்ல்) வாட்சப்புக்குப் புலம் பெயர்ந்து விட்டது. தொலை பேசி காதல், பூங்காக் காதல், கடற்கரைக் காதல், காஃபி டே காதல் மற்றும் ஷாப்பிங் மால் காதல் போன்றவை மூன்று மணி நேரத் திரைப்படம் போல அதன் ஆயுளை முடித்துக் கொள்கின்றன. கடற்கரைக் காற்றை வாடகைக்கு வாங்கி மனதை விற்கும் அவலங்களும் இங்கு அரங்கேறிக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது. மனதை நேசிக்கும் நல்ல காதல் ஆங்காங்கே அத்திப் பூத்தார் போல் தோன்றினாலும் சாதியும் பொருளாதாரமும் காதலின் கழுத்தைத் திருகி ஆணவக் கொலைக்கு வித்திடுகின்றன.
அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட், ஷாஜகான் - மும்தாஜ் என்று வரலாற்றில் காதலர்கள் தோற்றாலும் காதல் ஜெயித்திருக்கிறது.
“ஷாஜகானே மும்தாஜுக்கு தாஜ்மஹாலு தேவையில்ல! ரோசாக்கள எரிச்சு நீங்க சமாதி கட்டிப் புடாதீங்க!”
என்று இன்றைய காதலை நினைக்கும்போது நான் கல்லூரிப் பருவத்தில் எழுதிய இந்த கவிதை வரிகள் அவ்வப்போது என் நினைவில் வந்துவிட்டுப் போகிறது.
கடலில் சங்கமமாகும் நதியின் காதல், பூவில் தேனெடுக்கும் வண்டின் காதல், நீலப் போர்வையில் நிலவை அணைத்துக் கொண்டு தூங்கும் வானத்தின் காதல், மரங்களைத் தீண்டிவிட்டுச் செல்லும் தென்றலின் காதல் என இந்த உலகம் என்னும் காலப்பந்து காற்றால் அல்ல, காதலால் நிரப்பப்பட்டிருக்கிறது. உணர்வுகளைக் கடத்தும் உருவமில்லாத நம் ஊரின் காற்றும் காதலும் தலைமுறைகளைத் தாண்டி ஆயிரம் கதை சொல்லும். சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை காதல் என்பது மண் சார்ந்ததும் பெண் சார்ந்தது மாகவே இருக்கிறது. உன்னதமான காதலை வேரறுக்க எத்தனை வெறியாட்டங்கள் இம் மண்ணில் நிகழ்ந்தாலும் அன்பில் முதிர்ந்த காதலும் காதலில் முதிர்ந்த அன்பும் என்றைக்கும் மரித்ததாய் சரித்திரம் இல்லை!